ஒரு காலை பொழுதில் இப்படிதான் அவன் பொதுமக்களிடம் அறிவித்தான். அப்பொழுது, சிறு கம்பத்தின் குடியிருப்பாளர்கள் ஓர் இளைஞன் தண்ணீருக்குள் சுமார் இருபத்து இரண்டு மணி நேரம் காற்றைச் சுவாசிக்காமல் மூழ்க முயற்சிக்கும் காட்சியைக் காண ஆற்றங்கரையில் கூடியிருந்தனர்.
அவனுடைய முதல் அறிவிப்பிற்குக் குறைவான கவனம் கிடைத்ததால் ஒரு கணம் கழித்து அவன் மீண்டும் “எனக்கு அவசியமாக ஒரு தாய் தேவை” என்றான். “இங்குள்ள யாராவது என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?”
இம்முறை மக்கள் அக்கோரிக்கையால் கவரப்பட்டனர். அந்த இளைஞன் ஒரு நல்ல பின்னணியைக் கொண்டவன் என்பது சிறு கம்பத்தின் சராசரி மக்களுக்குத் தெரியும். கிராமத்தில் அவன் எந்தப் பிரச்சனையையும் ஏற்படுத்தியது இல்லை. ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் அவன் அதில் ஈடுபட்டதும் இல்லை.
ஆனால், ஏன் அவனுக்குத் திடீரென்று ஒரு தாய் தேவை? என்பது மக்களின் சந்தேகமாக இருந்தது.
அவர்கள் அறிந்தவரையில், அவ்விளைஞன் சிறு கம்பத்தின் மத்தியில் உள்ள ஒரு விடுதியில் தனியாக வாழ்ந்து வருகிறான். இந்திய பாரம்பரிய வீட்டின் பாணியில் கட்டப்பட்ட அந்தப் பெரிய வீட்டில் ஆறு அறைகள் உள்ளன. சிறு கம்பம் கரும்பு தோட்டத்தில் கங்காணியாக இருந்த முதியவர் ஒருவர் ஓர் அறையில் இருக்கிறார். இந்த இளைஞனோ ஓர் அறையில் வாடகைக்கு இருக்கிறான். மற்ற நான்கு அறைகளும் சிறு கம்பத்திற்கு வரும் எவருக்காவது வாடகைக்கு விடப்படும்.
காலையில், அவ்விளைஞன் சீராக உடையணிந்து தைப்பிங் நகருக்கு வேலைக்குச் செல்வான். அவன் மதியவேளையில் திரும்புவான். சில சமயங்களில் அவனைச் சிவபெருமான் கோவிலில் காணலாம். சில நேரங்களில் அவன் தாமான் பெர்தாமாவிலுள்ள இரவு சந்தைக்குச் செல்வான்.
சிறு கம்பம் மக்களுக்குத் தெரிந்த வேறு தகவல்கள் இல்லை. அவன் குடும்பத்தைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவனுடைய பூர்வீகம் கெடாவைப் போல் தோன்றியது. எனினும், இவ்விஷயம் குறித்து எந்த உறுதிபாடும் இல்லை.
“ஏன் உனக்கு ஒரு தாயார் வேண்டும்?” என்று ஆற்றங்கரையில் இருந்த ஒருவர் கேட்டார்.
“நான் புதுமை செய்ய வேண்டும். நான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்,” என மிகுந்த புன்னகையுடன் கூறினான். மக்கள் அந்த இளைஞனின் கூற்றைக் கேட்க அதிக ஆர்வம் காட்டத்தொடங்கினர். அவனது அறிவிப்பைக் கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர், மேலும் சிலர் அதிர்ச்சியடைந்தனர். கற்பனை செய்து பார்: ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க ஒரு தாயைத் தேடுதல்!
“எப்படிபட்ட தாயை நீ தேடிக்கொண்டிருக்கிறாய்?” எனத் தனிமையில் வாழும் ஒரு விதவை கேள்வி எழுப்பினார்.
“தன் பிள்ளைகளை நேசிக்கும் ஒரு பெண். தன் குழந்தைகள் எதிர்காலத் தலைவர்களாக வழிகாட்டும் ஒரு பெண். தியாகம் செய்ய தயாராக இருக்கும் ஒரு பெண்.”
முதலில் கேள்வி எழுப்பிய அந்த விதவை சிந்திக்கத் தொடங்கினார்: “குறிப்பிட்ட அனைத்து நிபந்தனைகளும் பொதுவானவையே. யாராலும் இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.”
அந்த நொடியில் அவ்விளைஞன் “மொட்டையடித்தப் பெண்” என்று தொடர்ந்தான். மக்கள் பார்க்கத் தொடங்கினர். அந்த இளைஞனுக்கு ஏன் ஒரு மொட்டையானத் தாய் வேண்டும் என்று அவர்கள் கண்டிப்பாக சந்தேகம் கொண்டிருப்பர். அந்த இளைஞன் அறிவித்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்காகப் பெண்கள் வெறுமனே தலையை மொட்டை அடித்துக் கொள்வது சாத்தியமில்லை.
“நான் சம்மதிக்கிறேன்.”
மீண்டும் பொதுமக்கள் குழப்பத்திற்கு ஆளாயினர். அவர்கள் அந்த விதவையைப் பார்த்தனர். இந்தப் பெண் தாயாவதற்கு வெறுமனே தன் தலையை மொட்டையடித்துக் கொள்வாளா? இவ்வாறு அவர்கள் கேள்வி கேட்டுக் கொண்டனர்.
அச்சமயம், அந்தப் பெண் எப்பொழுதும் தன் தலையில் அணிந்திருக்கும் துணியை விலக்கினார். முடியில்லாதத் தலையைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
“நான் ஒரு தாயாகச் சம்மதிக்கிறேன்” என்றார் அந்த விதவை.
“நன்றி” என்று அவ்விளைஞன் நிம்மதியுடன் சிரித்துக்கொண்டு அப்பெண்ணை நெருங்கினான். “இது நான் வாடகைக்கு இருக்கும் விடுதியின் அருகிலுள்ள மூன்று மாடி வீட்டின் சாவி. சென்று அந்த வீட்டை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.”