“காமினி.”
நான் சன்னலின் அருகிலிருந்து பக்கத்திலிருந்த கட்டிலுக்கு விரைந்தேன்.
“பிள்ளைங்க எங்க?” அம்மா கேட்டார்.
“எல்லா மேல் மாடியில இருக்காங்கமா. உங்களை தொந்தரவு செய்யலைனு நெனைக்கிறேன். ஏதாவது வேணும்மா, மா?”
“எனக்கு ஒன்னும் வேணாம். பிள்ளைகளை இங்க வரச் சொல்லேன், அவங்க குரல கேட்கனும்னு ஆசையா இருக்கு.”
அம்மாவின் நரைத்த முடியைக் கோதிவிட்டு, அறையின் கதவை நோக்கி நகர்ந்தேன். கதவு திறந்தவுடன், மேல் மாடியில் இருக்கும் என் பிள்ளைகளின் குரலைக் கேட்க முடிந்தது.
“யசோதா, கமேஷ்! பாட்டி உங்க ரெண்டு பேரையும் பார்க்கனுமாம்.”
கண் இமைக்கும் நொடியில் அவர்கள் இருவரும் அவசர அவசரமாக படியில் இறங்கி வந்தனர். முகத்தில் மகிழ்ச்சி பிரகாசித்தது. மதியமே தூங்கிய அவர்களின் பாட்டி விழித்துக் கொண்டதால் நிச்சயம் மகிழ்சியோடுதான் இருப்பார்கள்.
மீண்டும் அம்மாவின் கட்டிலருகே நான் நகர்ந்தபோது, என் இரு பிள்ளைகளும் மிகுந்த அன்போடு தங்கள் பாட்டியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர்.
“மத்தியானம் பாட்டி மயங்கி விழுந்ததும் நா பயந்துட்டேன்,” என் ஆறு வயது மகன் கூறினான்.
“நீங்க இப்ப நல்லா ஆயிடிங்களா பாட்டி?” எட்டு வயதான யசோதா கேட்டாள்.
“பாட்டி நல்லா இருக்கேன், பாட்டிக்கு ஒன்னும் ஆகல,” அம்மா என்னிடம் பார்வையைச் செலுத்தும் முன்பு தன் பேரப்பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஊட்டினார்.
“யசோதாவும் கமேஷும் சாப்பிட்டாங்களா? இப்ப மணி எத்தனை?”
அம்மா சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்க முயற்சி செய்தார்.
“நாங்க சாப்பிட்டோம் பாட்டி. அம்மாதான் ஊட்டி விட்டாங்க.”
நான் அம்மாவை நோக்கினேன். அம்மாவின் பார்வை இன்னும் சன்னலை நோக்கியே நிலைத்திருந்தது. ஒரு வேளை எப்படி அதற்குள் இருட்டி விட்டதென அம்மா நினைத்திருப்பார். நிச்சயம் தான் எட்டு மணி நேரம் உறங்கி விட்டதை உணர்ந்திருக்க மாட்டார்.
மதியம் திடீரென அம்மா மயங்கி விழுந்தார். நல்ல வேளை என் கணவர் வீட்டில் இருந்தார். மதிய உணவுக்காக வீடு திரும்பியிருந்தார். விஷ்ணுதான் அம்மாவைத் கைத்தாங்களாக பிடித்து கட்டிலில் படுக்க வைத்தார். விஷ்ணுதான் அவர் நண்பருக்கு தொடர்புக் கொண்டார், அவர் ஒரு மருத்துவர்.
மருத்துவர் கவலைப் படும்படி அம்மாவிற்கு எதுவும் இல்லை என உறுதிப் படுத்தினார். அம்மா சோர்வாக இருந்திருக்கலாம். அம்மாவிற்கு மருந்து கொடுக்கப்பட்டது. அவர் ஓய்வாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. உண்மையிலேயே அம்மா சோர்வாகத்தான் இருந்தார் போலும். எட்டு மணி நேரம் அயர்ந்து தூங்கியிருந்தார்.
“பாட்டி, இன்னிக்கு ரொம்ப இருட்டா இருக்குல?” சன்னலுக்கு வெளியே இன்னும் பார்வையோடு ஆழ்ந்திருந்த பாட்டியை நோக்கி கேட்டான் கமேஷ்.
“அம்மா சொன்னாங்க இன்னிக்கி பௌர்ணமினு. ஏன் நிலா வானத்துல இல்ல? அம்மாவாசை மாதிரி ஏன் இருட்டா இருக்கு?” என்று அம்மாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு கேட்டாள் யசோதா.
61 வயது நிரம்பிய பெண்மணியான அவர், மெதுவாகச் சன்னலிலிருந்து பார்வையை விடுவித்து என்னை நோக்கினார்.
அவரின் கண்கள் ஒளி வீசின. எதையோ மகிழ்ச்சியுடன் என்னிடம் சொல்லப் போவது போல் இருந்தது. ஆனால் திடீரென்று அவரின் முகம் மிகுந்த கவலைக் கொண்டதாக மாறியது. அம்மாவின் பார்வை என் சக்கர நாற்காலியில் நிலைக்குத்தியது. செயலிழந்து போன என் கால்களின் பகுதியில்.