டத்தோ எங்கள் கிராமத்திற்கு வந்தார்
[எழுதி மொழியாக்கம்
செய்தவர்: உதயசங்கர் எஸ்.பி]
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உண்மையில் என்ன நடந்தது என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன்.
அப்போது எனக்கு எழுத்தாளர் என்ற பட்டம் இல்லை. நான் இன்னும் ஒரு மாணவன். எழுத்தாளராக ஆசைப்படும் மாணவர்.
எங்கள் கிராமத்திற்கு டத்தோவின் வருகை ஒரு பெரிய நிகழ்வு.
விழாவைத் துவக்கி வைப்பதற்கான அழைப்பை டத்தோ ஏற்றுக்கொண்டதால், குடியிருப்பாளர்கள் ஒவ்வொருவரும் பெருமிதம் அடைந்தனர்.
ஒரு இலக்கிய ஆர்வலராக, திட்டமிடப்பட்ட மூன்று மணி நேர பேச்சுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.
இந்திய அரசியல் அமைப்பு (இ.அ.அ) எங்கள் கிராமத்தில் உள்ள பெரிய மண்டபத்தில் ஒரு இலக்கியப் பேச்சுக் கூட்டத்தை ஏற்பாடு செய்யப் போகிறது என்று எனது நண்பர் ஒருவர் கடந்த மாதம் என்னிடம் கூறினார்.
ஒரு இலக்கியவாதியை அணுகுவதற்கான வழி திறக்கப்படும் என்று என்னால் கற்பனை செய்ய முடிந்தது.
எனது படைப்புகளை வெளியிட முயற்சிக்கும் வழிகாட்டுதலும் ஊக்கமும் கிடைக்கும் என்று மனதிற்குள் கற்பனை செய்துகொண்டேன்.
உண்மையாகவே, நான் படிவம் மூன்றில் இருந்தே எழுத ஆரம்பித்தேன்.
நான் எழுதிய சிறுகதைகளை என் வகுப்பு தோழர்களைப் படிக்கச் சொன்னேன். அவர்கள் அதை விரும்பினர்.
ஆனால் எனது படைப்பை எந்தப் பிரசுரத்திற்கும் அனுப்பத் துணியவில்லை.
இருப்பினும், இது மற்றொரு அத்தியாயம் என்று நான் நினைக்கிறேன்.
இங்கு நான் சொல்ல விரும்புவது அந்த இலக்கியப் பேச்சு பற்றி.
சிறுகம்பம் கிளை இ.அ.அ இது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டாளராக தயாராக உள்ளது என்பதை அறிந்ததும் என்னால் நம்பவே முடியவில்லை.
முன்பு, வழக்கமாக பார்ட்டிகள், தீபாவளி விழாக்கள், விளையாட்டுகள், அரசியல் பேச்சுக்கள் (தேர்தலுக்கு முன்), பெண்கள் சந்திப்புகள் போன்றவற்றை மட்டுமே இ.அ.அ ஏற்பாடு செய்யும்.