1 Dec 2011

ஒரு சாதாரணக் கதை

அதோடு விட்டு விட வில்லை. அந்தச் சிறுமியை மிகவும் கேவலமாகத் திட்டினாள். அடிக்கவில்லை. அடித்தால் தெரியும், அவளது கணவன் கோபித்துக் கொள்வான் என்று.

“பீடை, பீடை.” கற்பகத்தை ஆவேசமாகத் திட்டினாள். “பணத்தை எங்கே ஒளித்து வைத்திருக்கின்றாய்?”

கண்ணம்மா தன் மகள் ஏசப்படுவதைப் பார்த்து, செய்வதறியாது மௌனமாக நின்று கொண்டிருந்தாள்.

“இந்த வீட்ல நாம் ஒண்டிக் குடித்தனம் நடத்துகின்றோம். உன் அண்ணி சொல்வதைக் கேட்டு, நாம் செவிடாக இருந்துதான் ஆகணும். அதைத் தவிர வேறு வழியில்லையம்மா.”

கண்ணம்மா அவ்வாறு கூறியதை நான் ஒரு முறை கேட்டிருக்கிறேன். அப்போது யசோதா கற்பகத்தை உதவாக்கரை எனத் திட்டியதோடு, “உங்களால என் நிம்மதி போச்சு” என மிகவும் சலித்துக் கொண்டாள்.

“எங்க நீ ஐம்பது ரிங்கிட்டை மறைத்து வைத்திருக்கின்றாய்?” என இரட்டை வால் பின்னியிருந்த கற்பகத்தின் தலைமுடியைப் பிடித்தவாறு யசோதா கேட்டாள்.

“நான் எடுக்கல, அண்ணி. நம்புங்கள். அந்தப் பணத்தை நான் பார்க்கவே இல்ல,” என அந்த 12 வயது சிறுமி அழுது கொண்டே மன்றாடினாள்.

“அவள விடுமா,” என மருமகள் என்று பார்க்காமல் யசோதாவின் காலைப் பிடித்து கண்ணம்மா மன்றாடினாள். “தயவு செய்து அவள விடுமா. என் மக நிச்சயம் பணத்தை எடுத்திருக்க மாட்டாள். உன்னைக் கெஞ்சிக் கேட்கின்றேன், அவள விட்டுருமா.”

யசோதா பிடிவாதமாக இருந்தாள். இரண்டு மாதங்களாக நான் இங்கு இருக்கின்றேன். அவளின் கெட்ட குணத்தை ஒவ்வொரு நாளும் நான் பார்க்கின்றேன்.

“இது நமக்கு வேண்டாம். எங்கே வாங்கினிங்களோ அங்கேயே போய் மறுபடியும் விற்று விடுங்கள்.”

நான் முதல் முதலாக வீட்டிற்கு வந்த போது எனக்குக் கிடைத்த வரவேற்பு இப்படித்தான் இருந்தது.

“இத வெளியில விட்டுடுங்க” அல்லது “இந்தக் கிளி எவ்வளவு அழகாக இருக்கின்றது” என அவள் கூறவில்லை. “கடைக்காரரிடமே போய்க் கொடுத்திருங்கள்” என அவள் சொன்னாள்.

இதே வரவேற்புதான் ராஜூவின் அம்மாவுக்கும் தங்கைக்கும் கிடைத்தது.

“அவங்க சிறு கம்பத்திலே இருக்கட்டும்,” எனக் கூறி, அம்மாவையும் தங்கையையும் ராஜூ வீட்டிற்கு அழைத்து வருவதை மறைமுகமாக அவள் தடுத்தாள். “உங்க அம்மா கிராமத்தில் இருந்து பழக்கப்பட்டவங்க. பெரிய பட்டணத்துல அவங்களால எப்படிக் காலம் தள்ள முடியும்?”

மன்னிக்கவும். கணவன் மனைவி உரையாடலை நான் ஒட்டுக் கேட்கவில்லை. அச்சமயத்தில் அவர்கள் BALCONY-ல தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். நான் அடைக்கப்பட்டிருந்த கூண்டு சிறிது நேரத்திற்கு வெளியில உள்ள மரத்தில் மாட்டப்பட்டிருந்தது. அதனால் அவர்களின் உரையாடல் என் செவிகளுக்குத் தெளிவாகக் கேட்டது.


(Petikan cerpen “Sebuah Cerita Biasa” karya Uthaya Sankar SB diterjemah ke Bahasa Tamil sebagai “ஒரு சாதாரணக் கதை” oleh Hemantha Kumar Nagappan dan ditaip semula oleh Salma Dhineswary menggunakan perisian ThamiZha. Versi asal cerpen ini dalam Bahasa Malaysia menang Hadiah Cerpen Maybank-DBP 1993 dan pertama kali terbit dalam antologi Menara 6. Turut dimuatkan dalam Siru Kambam dan Nayagi. Sila KLIK DI SINI bagi senarai cerpen lebih lengkap. Mahu mendengar versi audio cerpen ini? Hubungi Uthaya.)